< Back
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து  பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்   பயணிகள் கோரிக்கை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில் பயணிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
14 Dec 2022 1:11 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை பாதையில்...

திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி அகல ரெயில் பாதையில் தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களிலும், தேர்தல் நேரங்களிலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய தைப்பூச விழாவிற்கும் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிடடு தெற்கு ரெயில்வே சார்பாக கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்திற்கு (வண்டி எண் 06041) சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட்டது.

இதன் மூலம் ரூ.4 லட்சத்து 59 ஆயிரத்து 498 வருவாய் கிடைத்துள்ளது. மறுமார்க்கத்தில் தீபாவளி அன்று 24-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 06042) இயக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்து 275 வருவாய் கிடைத்துள்ளது.

மக்கள் வரவேற்பு

இந்த சிறப்பு ரெயில் தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டதால் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் திரும்பி செல்ல இந்த சிறப்பு ரெயில் மிகவும் பயன்பட்டது.

தீபாவளி சிறப்பு ரெயில் (06041/06042) சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ராமேசுவரத்தை அடைந்தது. மீண்டும் ராமேசுவரத்தில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6.20 மணிக்கு சென்றடைந்தது.

இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை வரும் நிலையில் சென்னையில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினசரி ரெயிலாக...

இந்த சிறப்பு ரெயிலை தினசரி இரவு விரைவு ரெயிலாக மாற்றவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம், துணைச் செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து எழும்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, வழியாக ராமேசுவரத்திற்கு இருமுனைகளிலிருந்தும் ரெயில் இயக்க வேண்டும். 16 ஆண்டுகளாக சென்னைக்கு நேரடி ரெயில் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வரும் திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணிகளுக்கு இந்த ரெயில் பயனுள்ளதாக இருக்கும்.

பலன் அடைவார்கள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய தைப்பூச விழாவை முன்னிட்டு காரைக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கும், பொங்கல் பண்டிகைக்கு சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரத்திற்கும் சிறப்பு ரெயில்களை இயக்கினால் பயணிகளும் பலன் அடைவார்கள். ரெயில்வேக்கு வருவாயும் கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்