புதுக்கோட்டை
புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை
|ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு ரெயில்கள்
பண்டிகை காலங்களில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக தென் மாவட்டங்கள், சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது உண்டு.
கடந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறைக்கு தாம்பரம்-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலையும் மற்றும் தீபாவளி பண்டிகையின்போது திருநெல்வேலி-தாம்பரம்-சென்னை, நாகர்கோவில்-தாம்பரம் (ஒரு வழி ரெயில்), கொச்சுவேலி-தாம்பரம்-கொச்சுவேலி ஹம்சபார் உள்ளிட்ட சிறப்பு ரெயில்களையும் புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் புதுக்கோட்டை பயணிகள் தவிர பிற பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
பயணிகள் கோரிக்கை
இந்த நிலையில் வருகிற ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது பற்றி அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் இருக்கைகள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
எனவே கடந்த ஆண்டை போல புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்களை வருகிற பண்டிகை காலத்தில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் புதுக்கோட்டை மட்டுமில்லாமல் இந்த வழித்தடத்தில் சென்னை, தென் மாவட்டங்கள் செல்லக்கூடிய ரெயில் நிலையங்களை சேர்ந்த பயணிகளும் பயன்பெறுவார்கள்.