< Back
ஆன்மிகம்
கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் முண்டியடிப்பு - சுவர் இடிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்
ஆன்மிகம்

கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் முண்டியடிப்பு - சுவர் இடிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்

தினத்தந்தி
|
26 Nov 2023 8:05 AM IST

திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கான அனுமதிச்சீட்டு அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீப தரிசனத்தைக் காண நள்ளிரவு முதலே திரளான பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது. கார்த்திகைத் தீபத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிச்சீட்டு அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனுமதிச்சீட்டைப் பெற அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில் அனுமதிச்சீட்டைப் பெற பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு வருவதால் பக்தர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சில பக்தர்கள் கல்லூரியின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வரிசையில் நிற்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளும் உடைக்கப்பட்டன. இதனால் பக்தர்களை தடுக்க போலீசார் திணறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்