அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
|ஆசிரியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு, பழைய ஒய்வூதியத் திட்டம், அனைத்துக் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் எதையும் நிறைவேற்றவில்லை.
தி.மு.க.வை நம்பி வாக்களிப்பது என்பது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டு மக்கள் வந்துவிட்டார்கள். ஆசிரியர்களும் தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழந்துவிட்டார்கள்.
எனவே பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும், இதேபோன்று இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.