பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படிபகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளி கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்று 1.5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த வாக்குறுதி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது, நம்பி வாக்களித்த பகுதி நேர ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயலாகும்.
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருமே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்கள். அரசு அளிக்கும் ரூ.10 ஆயிரம் சம்பளத்தை வைத்துக்கொண்டு தங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற முடியாத அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்யவும், அவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும் முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.