விழுப்புரம்
நாடாளுமன்ற தேர்தலை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும்
|நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் சிறப்பாக நடத்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தேர்தல் தொடர்பு அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவுரை வழங்கியுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து தேர்தல் தொடர்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான சத்யபிரதா சாஹூ தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சி.பழனி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-
16,91,579 வாக்காளர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் 5.1.2023 அன்றைய வாக்காளர் பட்டியலின்படி செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் 8,34,394 ஆண் வாக்காளர்களும், 8,55,708 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 213 பேர், வெளிமாநிலத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் 1,264 பேர் என மொத்தம் 16,91,579 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் தயார் நிலையில் வைக்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள ஆண், பெண் வாக்காளர்களிடையே உள்ள விகிதங்களை சரிசெய்திடவும், இரட்டை பதிவுகளை நீக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நடந்து முடிந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 50 சதவீதத்திற்கு குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து 100 சதவீத வாக்குப்பதிவை எய்திட விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு
மேலும் ஜூலை மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் இளம் வாக்காளர்களை பெருமளவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், அவர்களை தேர்தலில் பெருமளவில் வாக்களித்திடும் வகையில் விழுப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பணிகளின் கீழ் பள்ளி- கல்லூரி மாணவர்களிடையே போட்டிகள் நடத்த வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அறிந்துகொள்ளும் வகையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் சிறந்த முறையில் நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்திடும் வகையில் வாக்காளர்களான பொதுமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களித்திடும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆதார் இணைக்கும் பணி
விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 83.11 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்த 5,869 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பம் வழங்கிய 25,490 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்திடும் வகையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அனைத்து தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் எந்தவொரு தகுதியான வாக்காளரும் விடுபடாத வகையில் வாக்காளர் பட்டியலில் சேர்த்து அனைவரும் ஜனநாயக முறைப்படி வாக்களிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி மற்றும் தாசில்தார்கள், தேர்தல் பிரிவு தனி தாசில்தார்கள் பலர் கலந்துகொண்டனர்.