< Back
மாநில செய்திகள்
பரபரக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம்: பிரதமர் மோடி 4-ந் தேதி சென்னை வருகை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பரபரக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம்: பிரதமர் மோடி 4-ந் தேதி சென்னை வருகை

தினத்தந்தி
|
25 Feb 2024 6:31 AM IST

பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின், 'என் மண், என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

அப்போது மோடி பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளார். அதன்படி இந்த கூட்டத்திற்கு பிறகு பிரதமரை அண்ணாமலை சந்தித்து பேசுகிறார்.

இதில் தமிழக அரசியல், நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி, வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு பா.ஜனதா கூட்டணி மற்றும் பா.ஜனதா போட்டியிட இருக்கும் தொகுதிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமர் மோடி மதுரையில் இரவு தங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போது நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து வருகிற 28-ந் தேதி குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளுக்கு, மதுரையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அன்றைய தினமே நெல்லையில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்று பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 4-ந் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகை தர உள்ளார். சென்னையில் பா.ஜனதா சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் அல்லது பல்லாவரத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இருப்பினும், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை ஆய்வு செய்த பிறகே பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் இறுதி செய்யப்படும்.

இந்த பொதுக்கூட்ட மேடையில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தலைவர்களும் இடம் பெறுகின்றனர். அவர்களுடன் மேடையில் கைகோர்க்கும் பிரதமர் மோடி, அவர்களை வாக்காளர்களிடையே அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். அப்போது, வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பின்போது, தமிழகத்தின் முக்கிய தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர்களும் அறிவிக்கப்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்