நாடாளுமன்ற தேர்தல்: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை
|நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின், துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் இன்று சென்னை வந்தனர். இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் மாலை 5.30 மணி வரை ஆலோசனை நடத்த உள்ளனர்.