நாடாளுமன்ற தேர்தல்: இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
|தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இந்த தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் தேர்தல் கமிஷனர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் கமிஷனர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் கமிஷனர்கள் அஜய்பாது, மனோஜ்குமார் சாகு, முதன்மை செயலாளர் மலேய் மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோரும் வந்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு ஆய்வுக் கூட்டம் தொடங்குகிறது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ராஜீவ்குமார் ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளையும் தனித்தனியாக சந்தித்து பேசுவார்கள். இந்த கூட்டம் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மதிய உணவுநேரம் முடிந்ததும் பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்வார்கள்.
இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளன என்பதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆய்வு செய்வார். இந்த கூட்டம் இரவு 8 மணி வரை நீடிக்கும். தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கும். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் தங்களின் மாநிலங்களில் உள்ள தேர்தல் ஏற்பாடுகள், தயார் நிலை, முன்னெச்சரிக்கை, சட்டம் ஒழுங்கு ஆகியவை பற்றிய படக்காட்சி விளக்கத்தை தலைமை தேர்தல் கமிஷனரிடம் அளிப்பார்கள். இந்த கூட்டம் காலை 11 மணி வரை நடைபெறும்.
அதன் பின்னர் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை வருமான வரி துறை, வருவாய் புலனாய்வு துறை, சுங்கத் துறை, அமலாக்கத் துறை, சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஜி.எஸ்.டி. போன்ற அமலாக்க முகமைகளின் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை தலைமை தேர்தல் கமிஷனர் மேற்கொள்வார். அதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆகியோருடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை மேற்கொள்வார்.
அதன் பின்னர் பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரை பத்திரிகையாளர்களுக்கு ராஜீவ்குமார் பேட்டி அளிப்பார். அப்போது நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி எடுத்துரைப்பார். அதன் பின்னர் ராஜீவ்குமார் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்வார்கள்.