நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழ்நாட்டிற்கு இன்று துணை ராணுவம் வருகை
|நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு இன்று துணை ராணுவம் வருகை தர உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மேற்கொண்டு வருகிறார். இந்த தேர்தலின்போது பாதுகாப்பு பணிகளுக்காக 200 கம்பெனி துணை ராணுவத்தை மத்திய அரசிடம் இருந்து சத்யபிரத சாகு கோரியுள்ளார். முதல்கட்டமாக தமிழகத்திற்கு 25 கம்பெனி துணை ராணுவம், மார்ச் 1-ந்தேதி முதல் வரும் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில் அவர் தலைமையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்திற்கு 25 கம்பெனி துணை ராணுவ வீரர்களை இந்திய தேர்தல் கமிஷன் முதல்கட்டமாக ஒதுக்கி உள்ளது. அதில், 15 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் 1-ந்தேதி (இன்று) வருகிறார்கள். மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வரும் 7-ந்தேதி வருகின்றனர்.
இந்த துணை ராணுவ வீரர்களை அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, அவர்களை ஒருங்கிணைப்பது ஆகிய பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டோம். அதன்படி, 25 கம்பெனி வீரர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்புவது என்பது குறித்து முடிவு செய்துள்ளோம். துணை ராணுவ வீரர்கள் வர வர அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகள் பதற்றமானவை என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட பிறகு பதற்றமான பகுதிகள் பற்றி மீண்டும் ஆய்வு செய்வோம்.
தமிழகத்திற்கு வரும் போலீஸ் பார்வையாளர்கள், பொது பார்வையாளர்களின் பரிந்துரையுடன் பதற்றமான பகுதிகள் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். ஒரு கம்பெனியில் 90 துணை ராணுவ வீரர்கள் இருந்தாலும், வெவ்வேறு ஆயுதப்படை கம்பெனிகளைப் பொறுத்து வீரர்களின் எண்ணிக்கை மாறும்.
தமிழ்நாட்டுக்கு மொத்தமாக 200 கம்பெனி துணை ராணுவ வீரர்களை தேர்தல் பணிக்காக கேட்டுள்ளோம். அவர்கள் இனிமேல்தான் படிப்படியாக வருவார்கள். அந்தந்த பகுதிகளுக்கு சென்று கொடி அணிவகுப்பு நடத்துவார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் பதற்றமான பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிடுவது, பணியமர்த்தப்படும் பகுதிகள் பற்றி நன்றாக தெரிந்துகொள்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவார்கள்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு, மீண்டும் நிலைமை கண்காணிக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்களுக்கு பணி வழங்கப்படும். இப்போதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்துக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.