நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் கருத்து கேட்பு கூட்டம் நாளை நடக்கிறது
|2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அகில இந்திய காங்கிரஸ் அமைத்திருக்கிறது.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அகில இந்திய காங்கிரஸ் அமைத்திருக்கிறது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் நிதி மந்திரியும், மூத்த தலைவருமான ப.சிதம்பரமும், அகில இந்திய தொழில் வல்லுனர்கள் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கருத்துகளை கேட்கிற ஆலோசனை கூட்டம் 25-ந்தேதி (நாளை) மாலை 3.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கின் கீழ் தளத்தில் எனது முன்னிலையில் நடைபெற உள்ளது.
மாலை 6 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்போடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் பங்கேற்று கருத்துகளை கூறுவதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற அடித்தளமாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.