கரூர்
குடிநீர் இணைப்பு வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்: கிராமமக்கள் மனு
|கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராமமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 479 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் 65 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் 47 பயனாளிகளுக்கு 83 லட்சத்து 61 ஆயிரத்து 910 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் கிழக்கு கிராமம், அதியமான்கோட்டை ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் 250 குடும்பங்கள் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு குடிநீர் வசதி வேண்டி பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் சரியான குடிநீர் இணைப்பு இன்றுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு
அருகில் உள்ள ஒரு நிறுவனம் மூலமாக டெண்டர் விட்டு எங்கள் ஊரில் இருந்து குழாய்கள் புதைக்கப்பட்டு 2,3 ஆண்டுகள் ஆகியும் அதன் குடிநீர் இணைப்பு இன்னும் கிடைக்கவில்லை. குடிநீர் வழங்கக்கோரி கடந்த 15.8.2022 சுதந்திர தினத்தன்று சுமார் 200 குடும்பங்கள் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தோம். இந்த போராட்டத்தை தெரிந்து கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்களுக்கு குடிநீரும் கிடைக்கவில்லை. எங்களின் அடையாளமான ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகளை தங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம். எங்கள் பிரச்சினையில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து விடுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.