< Back
மாநில செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படுமா?
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆஞ்சநேயர் கோவிலில் 'வாகனம் நிறுத்துமிடம்' ஏற்படுத்தப்படுமா?

தினத்தந்தி
|
27 March 2023 12:15 AM IST

நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரசு சார்பில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

17-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 17-வது வார்டில் ஏ.எஸ்.பேட்டை மெயின்ரோடு, கோட்டை மெயின்ரோடு, ஏ.எஸ்.பேட்டை மேலத்தெரு, புது அக்ரஹாரம் தெரு, பிள்ளையார்கோவில் வீதி, நரசிம்ம சன்னதி தெரு, ஆஞ்சநேயர் கோவில் வீதி, சுண்ணாம்புகார தெரு, செல்லாண்டியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன.

இந்த வார்டில் கோட்டை உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. மேலும் இங்கு 3 ரேஷன்கடைகளும், 2 அங்கன்வாடி மையங்களும் இயங்கி வருகின்றன. இந்த வார்டில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மசாமி கோவில்கள் உள்ளன.

இந்த கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மட்டும் இன்றி பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர். இவர்கள் வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லை. எனவே அங்குள்ள வீதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு சார்பில் பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.

தெருநாய்கள் தொல்லை

இந்த வார்டு பழைய நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால், பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் கழிவுநீர் பிரச்சினை பெரிய அளவில் இல்லை. இந்த வார்டில் 1,285 ஆண்கள், 1,461 பெண்கள் என மொத்தம் 2,746 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கலைசெல்வி வெற்றிபெற்றார்.

நகராட்சியின் பிற வார்டுகளை போல இந்த வார்டிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அங்கன்வாடி கட்டிடம்

இது குறித்து ஏ.எஸ். பேட்டையை சேர்ந்த உஷா கூறியதாவது:-

எங்கள் வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும். கோட்டை தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரில் அமைத்து கொடுக்க வேண்டும்.

வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும். ஏ.எஸ்.பேட்டையில் உள்ள அங்கன்வாடி பழுதான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'பார்க்கிங்' வசதி

ஆஞ்சநேயர் கோவில் வீதியை சேர்ந்த மணிவண்ணன்:-

எங்கள் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வாகனங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பார்க்கிங் செய்ய போதிய வசதி இல்லை. எனவே கோவிலை சுற்றி உள்ள வீதிகளில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களை கோவில் முன்பு நிறுத்தி செல்கிறார்கள். இதனால் விஷேச நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு சார்பில் சரியான இடத்தை தேர்வு செய்து பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும். இதேபோல் ஆஞ்சநேயர் கோவிலுக்கும், நரசிம்மசாமி கோவிலுக்கும் இடையே உள்ள வீதியில் கடைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

ஆஞ்சநேயர் கோவில் வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் சாக்கடை கால்வாய் பழுதான நிலையில் உள்ளது. இதை புதுப்பிக்க வேண்டும். சுண்ணாம்புகார தெரு, செல்லாண்டி அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். பாதாள சாக்கடை குழிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். பழுதான சிமெண்டு சாலைகளை சீரமைக்க வேண்டும்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

இது குறித்து 17-வது வார்டு கவுன்சிலர் கலைசெல்வி கூறியதாவது:-

நான் தினசரி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறேன். ஆஞ்சநேயர் கோவில் மற்றும் நரசிம்மசாமி கோவில் வீதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்தது. நான் பொறுப்பேற்றவுடன் கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுத்து உள்ளேன். ஏ.எஸ்.பேட்டை மெயின்ரோட்டை புதுப்பித்து கொடுத்து உள்ளேன்.

வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு உதவித்தொகை பெற்று கொடுப்பது, நலவாரிய பதிவு உள்ளிட்டவற்றையும் செய்து வருகிறேன். பழுதான அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டவும், ரேஷன்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். நகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அப்போது எனது வார்டில் விடுபட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு, கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

1. தெருநாய்கள் தொல்லை இருக்க கூடாது.

2. ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பார்க்கிங் வசதி.

3. பழுதான அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம்.

4. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி.

5. பழுதான சாலைகளை புதுப்பிக்க வேண்டும்.

6. ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்.

மேலும் செய்திகள்