விழுப்புரம்
வாகனங்கள் நிறுத்துமிடம்
|விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஐகோர்ட்டு நீதிபதிகள் திறந்து வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல் மற்றும் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிந்த நிலையில் வாகனங்கள் நிறுத்துமிடம் திறப்பு விழா மற்றும் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தையும், ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.ஆனந்த்வெங்கடேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தையும் திறந்து வைத்தனர். தொடர்ந்து, 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கான டோக்கன்களை வக்கீல் சங்க நிர்வாகிகளிடம் ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.ஆனந்த்வெங்கடேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் வழங்கினர். பின்னர் அவர்கள் 3 பேரும், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.பூர்ணிமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், அரசு வக்கீல்கள் நடராஜன், சுப்பிரமணியன், வக்கீல் சங்க தலைவர்கள் தயானந்தம், நீலமேகவண்ணன், காளிதாஸ், பன்னீர்செல்வம் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.