'பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது' - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
|தமிழகத்தில் பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் சி.குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பு வாதத்தில், "மூத்த குடிமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரத்தை சேகரித்து வைக்கவும், அவர்கள் ஏதேனும் புகாரளித்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அதனை தீர்த்து வைக்கவும் தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.
அதோடு மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.