< Back
மாநில செய்திகள்
ஆவத்திபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி  நுழைவுவாயிலில் அமர்ந்து பெற்றோர் திடீர் தர்ணா  போலீசார் பேச்சுவார்த்தை
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆவத்திபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி நுழைவுவாயிலில் அமர்ந்து பெற்றோர் திடீர் தர்ணா போலீசார் பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
13 Jun 2022 11:49 PM IST

ஆவத்திபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி நுழைவுவாயிலில் அமர்ந்து பெற்றோர் திடீர் தர்ணா போலீசார் பேச்சுவார்த்தை

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 8-ம் வகுப்பு வரை ஆங்கிலம், தமிழ் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. 9-ம் வகுப்புக்கு ஆங்கில வழி வகுப்பறை இல்லாததால் தொடங்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் 8-ம் வகுப்பு தேர்வில் 33 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்து அவர்கள் 9-ம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர விரும்பினர். ஆனால் வகுப்பறை இல்லாததால் தலைமை ஆசிரியர் குமரன் பெற்றோர்களிடம் பள்ளிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் 9-ம் வகுப்பில் சேர்க்குமாறு கூறினாராம். இதற்கு சில பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெற்றோர்கள் சிலர் நேற்று காலை பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் பெற்றோர் தங்கள் மகன், மகள்களை பள்ளிபாளையத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க சம்மதம் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பள்ளியில் 9-ம் வகுப்புக்கு வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்