மகள் இறந்த சோகத்தில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை
|திண்டுக்கல் அருகே மகள் இறந்த சோகத்தில் தாய், தந்தை இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களின் 17 வயது இளைய மகள், கடந்த ஆண்டு மே மாதம், உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மகளின் இழப்பால் மன உளைச்சலில் தம்பதி இருவரும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தம்பதி இருவரும், கொடைரோட்டில் உள்ள ஒரு இடத்தில், விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். கணவர் இறந்த தகவல் கிடைத்ததும் சிகிச்சையில் இருந்த கிருஷ்ணவேணி, மருத்துவமனையில் இருந்து வெளியேறி மாயமானார்.
அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், கிருஷ்ணவேணி சடையாண்டிபுரம் அருகே, சிறுமலை அடிவாரத்தில் வனப்பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக தெரியவந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார், கிருஷ்ணவேணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.