சென்னை
காட்பாடி ரெயில் நிலையத்தில் வறுமை காரணமாக 3 மாத பெண் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்
|காட்பாடி ரெயில் நிலையத்தில் குடும்ப வறுமை காரணமாக 3 மாத பெண் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை ரெயில்வே போலீசார் வரவழைத்து தகுந்த அறிவுரை கூறி மீண்டும் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்தில் கடந்த 3-ந்தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தன்னுடைய 3 மாத பெண் குழந்தையை அருகில் இருந்த மூதாட்டி ஒருவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால் மூதாட்டி அந்த குழந்தையை காட்பாடி ரெயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.
ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், அந்த பெண் வேலூர் மாவட்டம், மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி (வயது 27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று ரெயில்வே போலீசார் இதுகுறித்து கலைச்செல்வியிடம் விசாரித்தனர். அப்போது, குடும்ப வறுமை காரணமாக இதுபோல் செய்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில், ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு, கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் விஜய் ஆகியோரை நேற்று சென்னை எழும்பூரில் உள்ள ரெயில்வே எஸ்.பி. அலுவலகத்துக்கு ேநரில் வரவழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறி குழந்தையை மீண்டும் அவர்கள் இருவரிடமும் ஒப்படைத்தார்.