செங்கல்பட்டு
காஞ்சீபுரத்தில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக பரந்தூர் விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் - அன்புமணி ராமதாஸ் யோசனை
|புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி செங்கை மத்திய-தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்து. இதில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர், கி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பா.ம.க.கவுரவ தலைவர் கோ.க.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயார். ஏழுமலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வாசு, மாவட்டத் துணைத் தலைவர் என்.எஸ்.ஏகாம்பரம், மத்திய மாவட்ட இளைஞர் அணி செயலாளர்.வக்கில். சக்ரபாணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து நிருபர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. ஆரம்பம் முதலே போராடி வருகிறது. தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தும் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் இடையே பிரச்சினை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். இந்த 5 ஆண்டுகளில், ஆன்லைன் சூதாட்டத்தால் 85 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னைக்கு 2-வது விமான நிலையம் என்பது அவசியமானது. இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதை எங்கே அமைக்கிறோம் என்பது தான் கேள்வி. தமிழக அரசு 6 இடங்கள் தேர்வு செய்து வைத்திருந்தது. இது தொடர்பாக பா.ம.க. சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மக்களிடம் எல்லாம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது. எங்களிடம் கருத்துக்களை பெற அரசிடம் தெரிவித்திருந்தோம், ஆனால் அரசு இதுவரை எங்களை அழைக்கவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது என்பதால், காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.