பரந்தூர் விமானநிலையம்: நிலம் எடுக்க அறிவிப்பு வெளியீடு
|நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,476 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான, முதல்நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேபனைகள் மீது வருகிற ஏப்ரல் மாதம் 4-ம்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.