கடலூர்
பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் தரிசனம்
|பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை பெரிய கடை தெருவில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முத்துக்குமாரசாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து கச்சேரி தெருவில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவில் நிர்வாக செயல் அலுவலர் மஞ்சு, கோவில் தலைமை எழுத்தர் முத்துக்குமரன் ஆகியோர் செய்திருந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் பாபு மற்றும் ருத்ரகிரி ஆகியோர் செய்திருந்தனர்.