பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு
|பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து தமிழக அரசும் மத்திய அரசும் பணிகளை தொடங்கி உள்ளது. குடியிருப்புகள், விளைநிலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதால் பாதிக்கப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள் விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
797 நாட்களாக அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும் அது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.