< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூர் சந்தை மேம்படுத்தப்படுமா?  வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூர் சந்தை மேம்படுத்தப்படுமா? வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
15 Dec 2022 6:45 PM GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் உள்ள சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து மேம்படுத்த வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை கூடும் சந்தை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சந்தைபேட்டை பகுதியில் மோகன் குமாரமங்கலம் என்கிற பெயரில் சந்தை உள்ளது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள காய்கறி வியாபாரிகள், பழ வியாபாரிகள், தின்பண்டம் கடைகள் வைப்போர், தேங்காய் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிர் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் கீரைகள் உள்ளிட்டவைகளை வியாபாரத்திற்கு கொண்டு வருகின்றனர்.

சந்தைக்கு பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான குப்புச்சிபாளையம், அனிச்சம்பாளையம், பொத்தனூர், வீரணம்பாளையம், பொய்யேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வாரந்தோறும் காய்கறிகள் மற்றும் பொருட்களை வாங்க வருகின்றனர். மேலும் இதே சந்தையில் ஆடுகள் விற்பனையும் நடைபெறுவதால் ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் வருகின்றனர்.

தண்ணீர் தேங்குவதால் சிரமம்

காலையில் 8 மணிக்கு தொடங்கும் சந்தை இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெறும். சந்தைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த சந்தை உரிய பராமரிப்பு இன்றியும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியும் வருவதால் காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் வியாபாரிகள் தங்கள் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு மண் மேடைகள் அமைத்தும், மழை மற்றும் வெயிலில் வியாபாரம் செய்ய முடியாமல் பிளாஸ்டிக் மற்றும் துணிகள் மூலம் நிழற்குடை அமைத்தும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையை போக்க பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை சந்தையை விரிவுபடுத்தி சிமெண்டு மூலம் மேடை அமைத்தும், மேற்கூரைகள் அமைத்தும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேற்கூரைகள்

இதுகுறித்து வியாபாரி லட்சுமணன் கூறியதாவது:-

பரமத்தி வேலூர் சந்தையில் மழை மற்றும் வெயில் காலங்களில் வியாபாரம் செய்ய மிகவும் சிரமமாக உள்ளது. மற்ற பகுதிகளில் உள்ள சாதாரண சந்தைகளில் கூட சிமெண்டு மேடை அமைத்தும், மேற்கூரைகள் அமைத்தும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள பெரிய சந்தையான பரமத்திவேலூர் சந்தையையும் மேம்படுத்தி உரிய வசதிகள் செய்து தர பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தார்சாலை வசதி

குப்புச்சிபாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரம் செய்து வரும் ஜோதீஸ்வரி:-

கடந்த பல ஆண்டுகளாக இந்த சந்தையில் நான் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். மழை மற்றும் வெயில் காலங்களில் வியாபாரம் செய்வதற்கு வசதியாக மேடை மற்றும் மேற்கூரைகள் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

சந்தையின் உள்புறத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க சந்தை பகுதியில் தார் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்