நாமக்கல்
பரமத்திவேலூரில்விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் ராஜா வாய்க்காலில் 15 நாட்கள் தண்ணீர் நிறுத்த முடிவு
|பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
பரமத்திவேலூர் ராஜா வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால்களில் மீதமுள்ள ரீமாடலிங் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் இருந்து ராஜா வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகனூர் வாய்க்காலில் குறுக்கே ராட்த குழாய்களை பதித்து தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும். பராமரிப்பு பணிகளுக்காக 15 நாட்களுக்கு ராஜா, கொமராபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து செயற்பொறியாளர் ஆனந்தன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் மார்ச் மாதம் 7-ந் தேதி வரை 15 நாட்கள் பராமரிப்பு பணிகளுக்காக ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்படும். மார்ச் மாதம் 7-ந் தேதி விவசாய பணிக்காக மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்றார். முடிவில் பரமத்திவேலூர் சரபங்க வடிநில கோட்ட உதவி பொறியாளர் சுரேகா நன்றி கூறினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன், பரமத்திவேலூர் ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் பெரியசாமி, கவுரவ தலைவர் செந்தில்நாதன், துணைத்தலைவர் குப்புதுரை, வெற்றிலை விவசாயிகள் சங்கத்தலைவர் வையாபுரி, மோகனூர் வாய்க்கால் பாசனதாரர் சபை தலைவர் சுந்தரம், துணைத்தலைவர் வரதராஜன், செயலாளர் அருணகிரி, கொமராபாளையம் பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜெயக்குமார், செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.