நாமக்கல்
பரமத்திவேலூரில்107-ம் ஆண்டு நடராஜர் மகா உற்சவ விழா
|பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் திருஞானசம்பந்த மடாலயத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் 107-ம் ஆண்டு மகாஉற்சவ விழா 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலை திருப்பள்ளி எழுச்சி, திருவெண்பாவை பாராயணம், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு அபிஷேகம், மகா அபிஷேகம், தங்க ஆபரணங்களால் சொர்ண அபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு திருக்கல்யாண உற்சவம், காலை 10 மணிக்கு நாரிகேள சிவலிங்க தரிசனம் நடந்தது. இதில் 1,008 தேங்காய்களை கொண்டு சிவலிங்கம் அமைத்து ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கிருபானந்த வாரியார் சாமிகளுடன் நடராஜமூர்த்தி ருத்ராட்ச அலங்காரத்தில் பன்னிரு திருமுறை பாராயணத்துடன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, மகா தீபாராதனை நடந்தது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.