பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
|பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவில் தமிழக வீராங்கனைகளான துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாசுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் எஸ்.யு.5 பிரிவு பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மணிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு நான் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் உலக அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.