அணிவகுப்பு ஊர்வலம்: ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களை நாளைக்குள் பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு
|ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களை நாளைக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தது. கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 43 இடங்களில் நடந்தது. தற்போது 58 இடங்களுக்கு அனுமதி கேட்டு போலீசில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால், இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்ட பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து , அனுமதி நிராகரித்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் போலீசாரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) முறையிட வேண்டும் என்றும் அப்போது போலீசார் கேட்கும் விவரங்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர்களது விண்ணப்பத்தை போலீசார் நாளைக்குள் (சனிக்கிழமை) பரிசீலித்து முடிவு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்குகளை 30-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.