அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேப்பர் கப் பயன்படுத்திய விவகாரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
|பேப்பர் கப் மூலம் ஆக்சிஜன் செலுத்துவதற்கு அனுமதி அளித்தது தவறு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் லேசான மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்காக வந்த சிறுவனுக்கு பேப்பர் கப்பை பயன்படுத்தி ஆக்சிஜன் செலுத்தப்பட்டது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், சம்பந்தப்பட்ட வீடியோ காட்சியில் இருக்கும் சிறுவனின் தந்தை ஆக்சிஜன் மாஸ்க் மூலம் தொற்று ஏற்படும் என்று கூறி பேப்பர் கப்பை பயன்படுத்தி ஆக்சிஜன் செலுத்தும்படி செவிலியரிடம் கூறியதாகவும், பின்னர் அவரே அதை வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் பேப்பர் கப் மூலம் ஆக்சிஜன் செலுத்துவதற்கு அனுமதி அளித்தது தவறு தான் என்று குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் போல் தெரிவதாகவும், இது இவ்வளவு பெரிதாக ஊடகங்களில் வந்திருப்பது வருத்தத்திற்குரிய விஷயம் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.