< Back
மாநில செய்திகள்
புளியந்தோப்பில் பயங்கரம்: முன்விரோதத்தில் ரவுடி வெட்டிக்கொலை - காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம்
சென்னை
மாநில செய்திகள்

புளியந்தோப்பில் பயங்கரம்: முன்விரோதத்தில் ரவுடி வெட்டிக்கொலை - காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம்

தினத்தந்தி
|
8 Jan 2023 12:26 PM IST

புளியந்தோப்பில் முன்விரோதத்தில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம், எம்.எஸ்.முத்து நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் கன்னிகாபுரம், தாஸ் நகர் வழியாக சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான சசிகுமார் மற்றும் அவரது உறவினர் திருநாவுக்கரசு ஆகியோர் தனது கூட்டாளிகளுடன் அவரை வழிமறித்தனர். பின்னர், மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் உள்ளதா என கேட்டு ஆகாஷை மிரட்டி அனுப்பியுள்ளனர். இதையடுத்து ஆகாசுக்கு ஆதரவாக அவரது அண்ணன் அஜித் (22), உறவினர் மனோ (27), மனோவின் மனைவி சுப்புலட்சுமி (23) ஆகியோர் சென்றுள்ளனர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சசிகுமாரும் திருநாவுக்கரசும் அடங்கிய 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் மனோவை சரமாரியாக வெட்டினர். அப்போது இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுப்புலட்சுமி தனது கணவரை விட்டு விடுங்கள் என அவர்களின் காலில் விழுந்து கதறினார். அதைத்தொடர்ந்து கணவரை காப்பாற்ற முயன்ற சுப்புலட்சுமியையும் வெட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதைத்தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோவை மீட்ட அவரது உறவினர்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மனோவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரவுடி மனோ மீது கொலை, கொலை முயற்சி உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதேபோல் அவரை கொலை செய்த முக்கிய குற்றவாளிகளான சசிகுமார் மற்றும் திருநாவுக்கரசு மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதும், கொலை செய்யப்பட்ட மனோவுக்கும் கொலைகும்பலுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவம் தொடர்பாக சசிகுமார் (26), திருநாவுக்கரசு (27), அப்பு (23), ரேவதி (32), தேவி (32), அருண் (28) வெற்றி (25) ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர். ஒரே பகுதியில் வசிக்கும் 2 ரவுடி கும்பலுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்