ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே பரபரப்பு: வகுப்பறை மேஜைக்குள் புத்தகத்தை தேடிய மாணவனை பாம்பு கடித்தது ஆஸ்பத்திரியில் சிகிச்சை
|வகுப்பறை மேஜைக்குள் புத்தகத்தை தேடிய மாணவனை பாம்பு கடித்தது. அவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வகுப்பறை மேஜைக்குள் புத்தகத்தை தேடிய மாணவனை பாம்பு கடித்தது. அவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாம்பு கடித்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் முனீஸ்பாலா (வயது 13). அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அவன், வகுப்பறையில் உட்கார்ந்திருந்தபோது மேஜையின் உள்பகுதியில் தற்செயலாக புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்டுள்ளான். அப்போது வெடுக்கென்று ஏதோ ஒன்று கடித்ததை உணர்ந்த முனீஸ்பாலா, உடனடியாக கையை உதறிக்கொண்டு வெளியில் எடுத்துள்ளான். உள்ளே பார்த்த அவனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அதனை கண்டு அலறவே மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு குளிர்பான பாட்டிலில் போட்டு அடைத்தனர். சில நிமிடங்களில் முனீஸ்பாலாவுக்கு வலியுடன் கூடிய மயக்க உணர்வு ஏற்பட்டதால் ஆசிரியர் ஒருவர் உடனடியாக மாணவனை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதே போல் பாட்டிலில் அடைக்கப்பட்ட பாம்பும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
அது ஒரு வகையான விஷப்பாம்பு என்பதை அறிந்த டாக்டர்கள், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவனின் உடல்நலம் தேறி இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
பள்ளி வளாகத்தையொட்டிய ஏதோ ஒரு புதரில் இருந்து வகுப்பறைக்குள் புகுந்த அந்த பாம்பு, மேஜைக்குள் பதுங்கி இருந்து இருக்கலாம் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.