தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்:மனைவியை அடித்துக்கொன்ற டிரைவர்
|ஓட்டப்பிடாரம் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை அடித்துக் கொன்ற டிரைவர் போலீசில் சரண் அடைந்தார்.
லாரி டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). லாரி டிரைவரான இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
மேலும், மாரியப்பனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மனைவி மீது தாக்குதல்
நேற்று முன்தினம் மாரியம்மாள் ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு மாரியப்பனும் சென்றார்.
அப்போது, கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் தனது மனைவி மாரியம்மாளை கீழே தள்ளிவிட்டு நெஞ்சில் ஏறி மிதித்து அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் நெஞ்சு எலும்பு முறிந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கொலை
அந்த வழியாக சென்றவர்கள் மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ெகாலை குறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசில் சரண்
இதற்கிடையே, தப்பி ஓடிய மாரியப்பன் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் ஓட்டப்பிடாரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓட்டப்பிடாரம் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை அவரது கணவரே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.