< Back
மாநில செய்திகள்
மதுரையில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன் நகைகள் கொள்ளை
மாநில செய்திகள்

மதுரையில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன் நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
10 July 2024 1:48 AM IST

மூதாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்று 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் மாயன் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி காசம்மாள்(வயது 65). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் பாண்டியராஜன், பரசுராமன். இவர்கள் இருவரும் மராட்டிய மாநிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

மகள் பாண்டியம்மாள். இவர் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ராஜம்பாடி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். தங்கராசு விபத்தில் காயமடைந்து மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் காசம்மாள் மட்டும் வாகைக்குளம் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் காசம்மாள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. ஆனால் கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் கழுத்து அறுபட்ட நிலையில் காசம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிந்துபட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் திருமங்கலம் துணை சூப்பிரண்டு அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வீட்டில் பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் நகைக்காக காசம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. காசம்மாள் கழுத்தில் 15 பவுன் சங்கிலி அணிந்து இருந்ததாகவும், பீரோவில் 50 பவுன் நகை இருந்ததாகவும் அவருடைய குடும்பத்தினர் கூறினர். எனவே காசம்மாளை கொலை செய்த கும்பல், 65 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த படுகொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடைய மர்ம நபர்களை விரைந்து பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்