சென்னை
ஜாம்பஜாரில் பட்டப்பகலில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் தப்பி ஓட்டம்
|சென்னை ஜாம்பஜாரில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் தப்பி ஓடிவிட்டது.
சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் 3-வது தெருவில் வசித்து வந்தவர் ராஜா என்ற ஆட்டோ ராஜா (வயது 49). ஆட்டோ ஓட்டி வந்த இவர், அதில் போதிய வருமானம் கிடைக்காததால், பாரதி சாலையில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரி அருகே கடந்த 4 மாதமாக டிபன் கடை ஒன்றும் நடத்தி வந்தார்.
ராஜா மீது ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில், பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்று மதியம் 2.50 மணியளவில் டிபன் கடையில் ராஜா இருந்தபோது, முககவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் 6 பேர் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். கத்தியாலும் குத்தி தாக்கினர்.
இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன ராஜா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரது தலை மற்றும் முகத்தில் வெட்டுக்காயம் விழுந்தது. உயிருக்கு அவர் போராடிக் கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, ராஜாவின் மனைவி அழுது புலம்பியபடி அங்கு ஓடிவந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவரை, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென் றார். ஆனால், அவரை அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜாம்பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாண குமார், கொலையை நேரில் பார்த்தவர்களிடமும், ராஜாவின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். டிபன் கடை நடத்திய இடத்தில், ராஜாவுக்கும் சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட ராஜா, ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவரது எதிரிகள் யாராவது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம், ஜாம்பஜார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையுண்ட ராஜா, பிரபல ரவுடிகள் மாடங்குப்பம் வினோத், பாலாஜி ஆகியோரின் தாய்மாமன் என்றும் கூறப்படுகிறது.