தேனி
போடியில் பட்டப்பகலில் பயங்கரம்: தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை
|போடியில் பட்டப்பகலில் தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
தங்கும் விடுதி உரிமையாளர்
தேனி மாவட்டம் போடி ஜக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 68). முன்னாள் ராணுவ வீரர். இவர் போடி காமராஜ் பஜாரில் தங்கும் விடுதி நடத்தி வந்தார்.
இன்று காலை 11 மணி அளவில் இவர், விடுதியில் இருந்து சந்தைப்பேட்ைட வழியாக மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். போடி தலைமை தபால் அலுவலகம் அருகே வந்த போது, அவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி அங்குள்ள கடையில் பலகாரம் வாங்கி கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஜீப்பில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திபு, திபுவென இறங்கினர்.
வெட்டிக்கொலை
பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள், தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ராதாகிருஷ்ணனை சரமாரியாக வெட்டினர். அவரது கை, தலை, மார்பு, கழுத்து பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் நிலைகுலைந்து போன ராதாகிருஷ்ணன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் இறந்து போனதை உறுதி செய்த அந்த கும்பல், தாங்கள் வந்த ஜீப்பிலேயே மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் வகையில், அரங்கேறிய இந்த கொலை சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
கேரள பதிவு எண்
இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் போடி ேபாலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசாரும் அங்கு சென்றனர்.
பின்னர் சம்பவம் நடந்த இடத்தை, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையாளிகள் பயன்படுத்திய ஜீப் கேரள மாநில பதிவு எண் கொண்டது என்பது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இதையடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் போலீசார் உஷார்படுத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் எந்த சோதனைச்சாவடியையும் அந்த ஜீப் கடந்து செல்லவில்லை என்பது தெரியவந்தது.
அதேநேரத்தில் போலீசாரை திசை திருப்பும் வகையில், கேரள பதிவு எண் கொண்ட ஜீப்பை கொலையாளிகள் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ராதாகிருஷ்ணனை தீர்த்து கட்டிய அந்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்று ஜீப்பின் நம்பர் பிளேட்டை மாற்றி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே கொலையாளிகள், தேனி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரணம் என்ன?
நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது தொழில் போட்டியால் நடந்ததா? என்பது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ராதாகிருஷ்ணனை தீர்த்து கட்டியது கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், பட்டப்பகலில் தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.