< Back
மாநில செய்திகள்
அம்பத்தூரில் பயங்கரம்: தாறுமாறாக ஓடிய கார் மோதி மாணவர் பலி - தந்தை கண் எதிரே பரிதாபம்
சென்னை
மாநில செய்திகள்

அம்பத்தூரில் பயங்கரம்: தாறுமாறாக ஓடிய கார் மோதி மாணவர் பலி - தந்தை கண் எதிரே பரிதாபம்

தினத்தந்தி
|
2 Jun 2023 1:56 PM IST

அம்பத்தூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி தந்தை கண் எதிரேயே மாணவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

அம்பத்தூர் பானுநகர், 27-வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர், புதூர் அருகே அம்பத்தூர்-செங்குன்றம் சாலையில் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி விற்பனை செய்யும் புதிய கடையை நேற்று திறக்க இருந்தார்.

இதற்காக நேற்று முன்தினம் இரவு புதிய கடையில் அலங்காரம் செய்யும் பணியில் அப்துல் ரகுமான், அவருடைய மகன் முகமது சுகைல் (வயது 17), நண்பர்கள் கண்ணதாசன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். நள்ளிரவில் பணிகள் முடிந்து 4 பேரும் வீட்டுக்கு புறப்பட தயாரானார்கள்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அந்த கார் அங்கு நின்றிருந்த முகமது சுகைல் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது.

தொடர்ந்து ஓடிய கார், அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதியது. மேலும் நிற்காமல் சென்ற கார் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது.

கார் மோதியதில் படுகாயம் அடைந்த முகமது சுகைல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தனது தந்தை கண் எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணதாசனுக்கு காலில் எலும்பு முறிந்து வலியால் அலறி துடித்தார். கார் மோதியதில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ சேதம் அடைந்தது.

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்த கண்ணதாசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மில்லர் (38) என்பவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் ஜார்ஜ்மில்லரை மீட்டு கைது செய்தனர். விசாரணையில் அவர், தனியார் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருவது தெரிந்தது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் பலியான முகமது சுகைல், தற்போது பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி (46). இவர், நேற்று முன்தினம் இரவு மேனாம்பேடு கருக்கு பூங்கா எதிரில் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் மோதி ராஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கொளத்தூர் ராகவேந்திரா நகரை சேர்ந்த சஞ்சீவராவ் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்