திருவள்ளூர்
சோழவரம் அருகே முன்விரோதத்தில் பயங்கரம்: மோட்டார் சைக்கிளை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை
|சோழவரம் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மர்ம கும்பல் வாலிபரை வெட்டிக்கொலை செய்தது. அவருடன் சென்ற தி.மு.க.ஊராட்சி மன்ற துணைத் தலைவரையும் கொலை கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுவரம்பாக்கம் பெரிய காலனியில் வசித்து வந்தவர் லட்சுமணன் (வயது 32). காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் இளங்கோவன் (29). தி.மு.க.வை சேர்ந்த இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார். சகோதர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் அனுமதியின்றி இளங்கோவன் ஏற்பாட்டின் பேரில், அப்பகுதியில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அம்பேத்கர் சிலை கல்வெட்டில் அதே ஊரைச் சேர்ந்த தென்னவன் என்பவர் பெயர் பொறிக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் தென்னவன், தவசி, சவுந்தரராஜன், அரவிந்தன், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருவிழாவில், தென்னவன் கும்பல் இளங்கோவன் ஆதரவாளர்களை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக லட்சுமணன், இளங்கோவன் ஆகியோர் சோழவரம் போலீசில் புகார் அளித்து விட்டு மோட்டார் சைக்கிள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நெடுவரம்பாக்கம் காலனி அருகே உள்ள சாலையில் வந்து கொண்டிருக்கும் போது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் அவர்களை வழி மறித்து தாக்கியது. லட்சுமணன், இளங்கோவன் இருவரும் தப்பி ஓட முயன்றபோது, அவர்களை சுற்றி வளைத்த மர்ம கும்பல் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தப்பி ஓட முயன்ற ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோவன் 2 கைகள் வெட்டப்பட்ட நிலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்த நிலையில் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோவனை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கொலை செய்யப்பட்ட லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து அதே பகுதியை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை சம்பவத்தால் பதட்டம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.