< Back
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
திண்டுக்கல்
மாநில செய்திகள்

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

தினத்தந்தி
|
5 April 2023 12:30 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.

அருள் முருகன் கோவில்

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் காந்திகுன்றம் என்ற மலை மீது அருள்முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு சந்தனம், பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், திருநீர் போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவையொட்டி பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி முருகனை வழிபட்டனர். இதேபோல் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. எஸ்.தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பால்குடம், காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாதாள செம்பு முருகன் கோவில்

இதேபோல் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. பாதாள செம்பு முருகனுக்கு கருங்காலி மாலை அணிவித்து பக்தர்கள் வழிபட்டனர்.

சிறப்பு அலங்காரத்தில், முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சென்னை, திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், தேனி, கம்பம் ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் ஆதீனம் சித்த அருள் சுவாமி அறிவாதீனம் பக்தர்களுக்கு மூலிகை திருநீறு கொடுத்து ஆசி வழங்கினார். விழாவையொட்டி காலை முதல் மாலை வரை கோவிலில் அன்னதானம் நடந்தது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்