ராமநாதபுரம்
ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
|ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளான, ஏப்ரல் 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளான, ஏப்ரல் 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பங்குனி உத்திர திருவிழா
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். அதுபோல் ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவில், குயவன்குடி முருகன் கோவில் மற்றும் ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். இந்தநிலையில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதேபோல் ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை தொடங்குகிறது. இந்த கோவில்களில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் வேல்காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி என பலவிதமான காவடிகள் எடுத்தும், கரகம், பால்குடம் எடுத்தும் நொச்சியூரணியிலிருந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல் ராமேசுவரத்தை சுற்றியுள்ள புதுரோடு, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், கெந்தமாதனபர்வதம், அரியாங்குண்டு, பேக்கரும்பு, ஏரகாடு, சம்பை, மாங்காடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேல்காவடி, பறக்கும் காவடி பால்குடம், மயில் காவடி என பலவிதமான காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழாவன்று ஏப்ரல் 5-ந் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் விடுமுறை
இதுகுறித்து பா.ஜ.க. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கூறும்போது, ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவிலுக்கு நகரின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே வந்து பறவை காவடி, மயில் காவடி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்று ஒரு நாள் ஊரே திருவிழா கோலமாக காட்சியளிக்கும். எனவே பக்தர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் 5-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று ஒரு நாள் மட்டுமாவது உள்ளூர் விடுமுறை அறிவித்தால் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறும்போது, நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா மாவட்ட கலெக்டரால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் வழிவிடு முருகன் கோவில், ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலவிதமான காவடிகள் எடுத்து அன்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.