சென்னை
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
|மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது. 3-ந்தேதி தேரோட்டமும், 4-ந்தேதி 63 நாயன்மார் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
'கயிலையே மயிலை..மயிலையே கயிலை' என்று பக்தர்களால் அழைக்கப்படுவது மயிலாப்பூர். அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது, திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது, வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டது மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்.
மயிலாப்பூரில் உள்ள வெள்ளீசுவரர், கபாலீசுவரர், விருப்பாக்ஷீசுவரர், காரணீசுவரர், மல்லீசுவரர், வாலீசுவரர், தீர்த்தபாலீசுவரர் ஆகிய 7 சிவாலயங்கள் சிறப்பு வாய்ந்தவையாகும். எனவே இங்கு மாதம் தோறும் திருவிழாக்கள், சாமி ஊர்வலம் வருவது, மங்கல வாத்தியங்கள் கேட்டு கொண்டே இருக்கும். அந்தவகையில், பல்வேறு சிறப்புகளை கொண்ட மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
கொடியேற்றம்
அந்தவகையில் நடப்பாண்டு பங்குனி திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 7 மணிக்கு கொடிமண்டபத்தில் சாமி எழுந்தருள, 7.30 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர, கெட்டிமேள இசை ஒலிக்க பலத்த ஆரவாரத்துடன் திருவிழா கொடிஏற்றப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் கொடி மீது மலர்தூவி வணங்கினர். இதையடுத்து கொடியேற்றத்துக்கான மகா தீபாரதனை காட்டப்பட்டது.
கூடியிருந்த பக்தர்கள் 'மயிலையே, கயிலை' என்று பக்தி பரசவத்துடன் கோஷமிட்டனர். இதில் தமிழக அறநிலையத்துறை கமிஷனர் க.வீ.முரளீதரன், கோவில் இணை-கமிஷனர் இரா.ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு அம்பாள் மயில் வடிவம் சிவபூஜை காட்சி, புன்னை மரம், கற்பகமரம், வேங்கை மர வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம், 63 நாயன்மார் வீதி உலா
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) வெள்ளி சூரிய வட்டம், வெள்ளி சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 30-ந்தேதி காலை 5.45 மணிக்கு அதிகார நந்தி காட்சி, திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடக்கிறது. வரும் 3-ந்தேதி (திங்கள்கிழமை) நடக்கும் தேரோட்டத்தையொட்டி காலை 7.25 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது.
தொடர்ந்து 4-ந்தேதி பகல் 2.45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் எழுந்தருள அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந்தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.