சென்னை
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு நொறுங்கியதால் பரபரப்பு
|சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பன்னாட்டு புறப்பாடு முனையம் அருகே விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் செல்லும் நுழைவு வாயில் கண்ணாடி கதவின் ஒரு பகுதி திடீரென உடைந்து நொறுங்கியது. ஆனால் கண்ணாடி சிதறல்கள் கீழே விழவில்லை. அப்படியே கண்ணாடி கதவு நொறுங்கியடி இருந்தது.
அப்போது பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி, உணவக ஊழியர்கள் சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடினார்கள். கண்ணாடி நொறுங்கிய நிலையில் அந்த கதவு அகற்றப்படாமல் அப்படியே இருப்பதால் அந்த வழியாக செல்லும் ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர்.
டிராலி போன்ற தள்ளுவண்டி சென்றபோது கதவில் பட்டு கண்ணாடி நொறுங்கியதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2012-ம் ஆண்டு திறக்கப்பட்ட விமான நிலையத்தில் 85-க்கும் மேற்பட்ட முறை கண்ணாடி உடைந்தது. கடந்த 5 ஆண்டுகளாக கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் இல்லாத நிலையில் தற்போது புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கண்ணாடி கதவு நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.