கோயம்புத்தூர்
வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|அங்கலகுறிச்சியில் வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த பிரகாஷ். இவர் கோட்டூர், அங்கலக்குறிச்சி போன்ற பகுதிகளில் மளிகை மற்றும் பேக்கரிகளுக்கு வேன் மூலம் பால் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் மந்திராலயம் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவரை டிரைவராக நியமித்து உள்ளார். இதற்கிடையில் டிரைவர் முரளி பால் வினியோகம் செய்வதற்கு வேனை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். காலை 5.30 மணிக்கு அங்கலகுறிச்சி ராமர் கோவில் வீதியின் வேன் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று பின் பகுதியில் தீப்பிடிப்பதை பார்த்து முரளி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வேனை நிறுத்தி விட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்து தண்ணீர் வாங்கி வருவதற்குள் தீ மளமளவென வேன் முழுவதும் எரிய தொடங்கியது. இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் கணபதி மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வேனில் கியாஸ் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.