< Back
மாநில செய்திகள்
திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தின் சக்கரத்தில் பறவை மோதியதால் பரபரப்பு - 16 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி
மாநில செய்திகள்

திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தின் சக்கரத்தில் பறவை மோதியதால் பரபரப்பு - 16 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி

தினத்தந்தி
|
2 March 2023 6:15 AM IST

திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தின் சக்கரத்தில் பறவை மோதியது. இதனால் 16 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற விமானத்தால் பயணிகள் அவதி அடைந்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.10 மணி அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு ஓடுதள பாதையில் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமானிகள் உள்பட 183 பேர் இருந்தனர்.

இதனிடையே விமானத்தின் முன்சக்கரத்தில் திடீரென்று பறவை மோதி சிக்கி கொண்டது. இதனை கண்ட விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதன் பின் விமானம் ஓடுதள பாதையில் இருந்து விமான நிலைய வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

திடீரென்று விமானம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான நிறுவன ஊழியர்கள் நடந்த சம்பவத்தை கூறியதை அடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.

ஆனால் விமானம் மீண்டும் எத்தனை மணிக்கு புறப்படும் என்ற தகவலை தெரிவிக்காததாலும், உணவு தாமதமாக வழங்கப்பட்டதாலும் பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தினர்.

இதைதொடர்ந்து விமானத்தின் முன் சக்கரத்தில் சிக்கிய பறவையை அப்புறப்படுத்திய பின் நேற்று மாலை 4.10 மணி அளவில் ஏர் ஏசியா விமானம் மலேசியா தலைநகர் கோலாலம்பூரை நோக்கி புறப்பட்டது. 16 மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்