புதுக்கோட்டை
ஊராட்சி தலைவர் பதவி விலகக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்ததால் பரபரப்பு
|நாகுடியில் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவி விலகக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி தாலுகா நாகுடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாகுடி ஊராட்சியில் நடந்த ஊழல் சம்பந்தமாக மக்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு ஊராட்சி நிர்வாகம் பதில் சொல்ல முடியாமல் போனதால் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நாகுடி ஊராட்சியில் ஊழல் செய்த தலைவர் அதற்கு உடந்தையாக இருந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானத்தை கையொப்பமிட்டு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். இதற்கு தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் ஆதரவு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது சம்பந்தமாக தி.மு.க. உறுப்பினர் கூறுகையில், ஊழல் யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், நானும் இந்த ஊராட்சியை சேர்ந்தவன் என்பதால் மக்களோடு மக்களாக ஆதரவு தெரிவிக்கிறேன் என்று கூறினார். இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.