< Back
மாநில செய்திகள்
சிக்கல் ஊராட்சி உறுப்பினர்கள் கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சிக்கல் ஊராட்சி உறுப்பினர்கள் கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
15 Aug 2023 12:15 AM IST

சிக்கல் பகுதியில் குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்கல் பகுதியில் குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்கல் ஊராட்சி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சிக்கல் ஊராட்சி. இந்த ஊராட்சியை சேர்ந்த துணை தலைவர் நூருல்அமீன் தலைமையில் 12 உறுப்பினர்கள் நேற்று காலை மக்கள் ஒற்றுமைக்குழு அமைப்புடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பெண் கவுன்சிலர்கள் காலி குடங்களை தலையில் சுமந்தவாறு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இவர்கள் தங்கள் பகுதியில் 6 கிராமங்களில் 3 ஆயிரத்து 500 பேர் வசித்து வரும் நிலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குடிநீர் சப்ளை செய்யாமல் உள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் கோரி கோஷமிட்டனர்.

குடிநீர் வசதி செய்துதரக்கோரி கடந்த 10-ந் தேதி காலிகுடங்களுடன் பஸ்நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். அப்போது சர்தார்சேட் என்ற சிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் தரையில் அமர்ந்து குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து மொட்டை அடித்துக் கொள்ளப் போவதாக தெரிவித்தார். அவருக்கு மொட்டை அடிக்க முயன்றபோது போலீசார் வந்து தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜினாமா கடிதம் கொடுத்தனர்

இதனை தொடர்ந்து துணைத்தலைவர் நூருல்அமீன் தலைமையில் கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து மக்களுக்கான குடிநீர் கிடைக்காத போது இந்த பதவி எதற்கு? என்று தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி துணை தலைவர் உள்பட 12 உறுப்பினர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அந்த கடிதங்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். சிக்கல் ஊராட்சி கவுன்சிலர்கள் துணைத்தலைவர் தலைமையில் ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில் அதனை கலெக்டர் பெற்றுக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்