காஞ்சிபுரம்
ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கார் தீ வைத்து எரிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
|ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கார் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் டி.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்அமுதன் (வயது 52). தி.மு.க.வில் ஆதனூர் கிளை செயலாளராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு ஆட்களை பணியில் அமர்த்தும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி குன்றத்தூர் தெற்கு ஒன்றிய மகளிரணி தி.மு.க. அமைப்பாளராகவும், ஆதனூர்-கரசங்கால் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலராகவும் உள்ளார். இந்த நிலையில் தமிழ்அமுதன் தனது நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்காக நேற்று முன்தினம் மாலை 3 புத்தம் புதிய கார்களை வாங்கி வந்துள்ளார்.
புதிதாக வாங்கப்பட்ட 3 கார்களையும் தனது வீட்டின் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் வளாகத்தில் அவரது டிரைவர்கள் வரிசையாக நிறுத்தி வைத்து பூஜை செய்து அங்கேயே இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு 11½ மணியளவில் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது புதிய கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் காரின் பின்பக்கம் மற்றும் காரின் சீட் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் மற்ற 2 புதிய கார்கள் எந்தவித சேதமும் இல்லாமல் தப்பியது.
இதுகுறித்து தமிழ்அமுதன் மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், மணிமங்கலம் உதவி கமிஷனர் ரவி மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது தொர்பாக நேற்று ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பெட்ரோல் ஊற்றி கார் தீ வைக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.