சென்னை
பால் வியாபாரி கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது
|பால் வியாபாரி கொலை வழக்கில் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் முரளி(வயது 26). பால் வியாபாரியான இவர், கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் அலமாதி சாந்தி நகரைச் சேர்ந்த திலீபன்(25), நவீன்(24), தீபன்(41), ஆறுமுகம்(60) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் இந்த கொலை வழக்கில் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன்(39) சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அவரையும் கைது செய்ய வலியுறுத்தி அப்போது முரளியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்ைக எடுப்பதாக கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் பால் வியாபாரி முரளி கொலை வழக்கில், அலமாதி ஊராட்சி மன்ற தலைவரான தமிழ்வாணனும் சேர்க்கப்பட்டார். இதையறிந்த தமிழ்வாணன் தலைமறைமாகிவிட்டார்.
அவரை பிடிக்க செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் சோழவரம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று அலமாதியில் பதுங்கி இருந்த தமிழ்வாணனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.