விருதுநகர்
ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்தாய்வு கூட்டம்
|ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்தாய்வு கூட்டம்
சிவகாசி
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 கிராம பஞ்சாயத்துக்களின் தலைவர்கள் மற்றும் செயலர்கள் பங்கு பெற்ற கலந்தாய்வு கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் தண்டபாணி, தாசில்தார் லோகநாதன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமமூர்த்தி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து செயலர்கள் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது, பஞ்சாயத்து பகுதியில் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காணுங்கள். பொதுமக்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுங்கள். தங்கள் பஞ்சாயத்துக்களில் அவசியம் செய்ய வேண்டிய 10 முக்கிய பணிகள் குறித்து உடனே தகவல் கொடுங்கள். அந்த பணிகளை செய்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனே செய்யும் என்றார். நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவர் தேவராஜன் கூறியதாவது, எனது பஞ்சாயத்துக்கு உட்பட்ட போஸ் காலனியில் கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும். இதற்காக நான் கடந்த 3 ஆண்டுகளாக பல அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து வருகிறேன். தற்போதும் கலெக்டரிடம் மனு கொடுத் துள்ளேன். விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார். அனுப்பன்குளம் பஞ்சாயத்து தலைவர் கவிதாபாண்டியராஜ் கூறியதாவது, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊராட்சியில் இருந்து பணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அலுவலகத்துக்கு மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்படுகிறது. ஆனால் நிர்வாக அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அந்தந்த நிதியாண்டில் செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே ஊராட்சி மூலம் தேர்வு செய்யப்படும் பணிகளை உடனுக்குடன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக் டரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.
கலெக்டர் ஜெயசீலன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் தனித்தனியாக அழைத்து தேவைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். இதனால் பஞ்சாயத்து வளர்ச்சி பணிகள் அதிக அளவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.