ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்டவரை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவரை கைது செய்ய வேண்டும் - சீமான்
|கிராமசபை கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்டவரை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர், துணைத்தலைவரை கைது செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் ஊரணி ஊராட்சியில் கடந்த நவம்பர் 1-ம் தேதி அன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், ஊராட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் கிளைச் செயலாளர் அன்புத்தம்பி விஜயகுமாரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரின் மாமனார் சைவம், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஆகியோர் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த சிறப்பு அலுவலர் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ள இக்கொடூர தாக்குதல் மக்களாட்சி நடைமுறையையே கேலிக்கூத்தாக்கியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிராமசபைக் கூட்டங்கள் பலமுறை ஒத்திவைக்கப்படுவதும், கேள்வி கேட்பவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் தொடுப்பதும் தொடர் கதையாகிவிட்டது. கடந்த மாதம் அக்டோர் 2 அன்று விருதுநகர் மாவட்டம் கங்காகுளம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், ஊராட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பரை ஊராட்சி மன்றச் செயலாளர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்த கொடும் நிகழ்வின் வடு மறைவதற்குள் மற்றுமொரு சனநாயக படுகொலை அரங்கேறியுள்ளது.
தம்பி விஜயகுமாரைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு இதுவரை எடுக்காதது ஏன்? மக்களின் சார்பாக நியாயமான கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் ஊராட்சி மன்றப் பொறுப்பாளர் தம்பி விஜயகுமாரை தாக்கிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது ஏன்? கேள்வி கேட்பதற்காகத்தானே கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது? மக்களின் குரலாக கேள்வி கேட்டவரைத் தாக்குவதென்பது என்ன மாதிரியான சனநாயக நடைமுறை?
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் சாதாரண ஊராட்சி மன்ற பெண் தலைவர்களின் கணவர்கள் முதல்-அமைச்சர்கள் வரை தங்களின் அதிகார கொடுங்கரங்களால் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தி, மிரட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு அதிகார அத்துமீறல்கள் உச்சத்தில் உள்ளது என்பதற்கு இந்நிகழ்வுகளே தக்கச் சான்றாகும்.
ஆகவே, திமுக அரசு ஊராட்சியில் நிகழும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக மக்களின் பக்கம் நின்று கேள்வி எழுப்பிய தம்பி விஜயகுமாரை அவமதித்து, கடுமையாக தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் தாமரைச்செல்வியின் கணவர் ராமதாஸ், மாமனார் சைவம், துணைத்தலைவர் ரமேஷ்குமார் ஆகிய அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன். மேலும், இக்கொடுந்தாக்குதலில் காயமுற்று சிகிச்சை பெற்று வரும் விஜயகுமாருக்கு உரிய மருத்துவமும், இழப்பீடும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.