ராமநாதபுரம்
மீன்கள் கிடைத்தும் விலை இல்லாததால் பாம்பன் மீனவர்கள் ஏமாற்றம்
|ஒரு வாரத்துக்கு பிறகு மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பிய பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் மீன்கள் கிடைத்தும் விலை இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
ராமேசுவரம்
ஒரு வாரத்துக்கு பிறகு மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பிய பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் மீன்கள் கிடைத்தும் விலை இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மீன் பிடிக்க சென்றனர்
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட ஊர்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரியை நோக்கி நகர்ந்தது.
இந்த நிலையில் பாம்பன் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் 1 வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சீலா, மாவுலா, விளைமீன், பாறை, முரல், கணவாய் உள்ளிட்ட பலவகை மீன்களுடன் நேற்று காலை கரை திரும்பினார்கள்.
கரை திரும்பினர்
ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பிய மீனவர்களுக்கு ஓரளவு மீன்கள் கிடைத்து இருந்ததாலும் எதிர்பார்த்த அளவு விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதுபோல் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்ட தெற்கு வாடி துறைமுகம் மீனவர்கள் நேற்று மீன் பிடித்து கரை திரும்பியதை தொடர்ந்து மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள் குவிந்திருந்ததால் களைகட்டி காணப்பட்டது.
மேலும், 8 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க மீன் துறை அதிகாரிகளால் நேற்று அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. அனுமதி சீட்டு வழங்கப்பட்டதை தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று உள்ளனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரைதிரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.