< Back
மாநில செய்திகள்
அடி முதல் நுனி வரை வள்ளல்போல் அள்ளிதந்த கற்பகதரு
திருப்பூர்
மாநில செய்திகள்

அடி முதல் நுனி வரை வள்ளல்போல் அள்ளிதந்த கற்பகதரு

தினத்தந்தி
|
17 Oct 2022 7:58 PM IST

அடி முதல் நுனி வரை வள்ளல்போல் அள்ளிதந்த கற்பகதரு

திருப்பூர்

தமிழ்நாட்டின் மாநில மரமாகவும், தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இணைந்துள்ள மரம் பனை மரம். நிலத்தடி நீரை அதிகரித்து மண் அரிப்பை தடுத்து, மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தி, மண்ணிற்கு தகுந்த மரமாகவும் விளங்குவதோடு அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. கற்பகதரு என்ற பெயரும் உண்டு.

பனை ஓலையின் ஆயுட்காலம் 400 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். பண்டைய கால இலக்கியங்கள் எல்லாம் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளன. வறட்சியான பகுதியில் பனை மரங்கள் வளரும். பனங்கொட்டையை விதைத்தால் 3 மாதங்களில் பனங்கன்று வரும். அதை நட்டால் 10 ஆண்டுகளில் பருவத்துக்கு வரும். 120 ஆண்டுகள் வரை பயன்தரக்கூடியது.

பதநீர், நுங்கு, பனங்கருப்பட்டி, பனம்பழம், பனங்கிழங்கு என மரத்தில் இருந்த அனைத்து பொருட்களும் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்ககூடியதாக இருக்கிறது. ஆனால் காலஓட்டத்தில் பனை மரம் உற்பத்தியை விவசாயிகள் கைவிட்டு விட்டனர். மழை பொழிவு குறைவால் பனை மரங்கள் வளர்ப்பில் ஆர்வம் செலுத்தாமல் விட்டுவிட்டதால் இப்போது பனை மரத்தை காண்பது என்பது அரிதாகிவிட்டது.

மண் வளத்தையும், மண் அரிப்பையும் தடுக்கும் பனை மரங்கள் ஆற்று ஓரங்களில், ஓடை ஓரங்களில் அதிகமாக வளர்க்கப்படும். தற்போது பனை மர வளர்ப்பை ஊக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் மூலமாக மாவட்டம் வாரியாக பனை விதைகள் 100 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் பனை விதைகள் விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 25 பனை விதைகள் வழங்கப்பட இருக்கிறது. பதிவு செய்யும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். மேலும் பனை மரத்தின் பலன்கள் குறித்தும் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

மாவட்டத்தில் குன்னத்தூர், ஊத்துக்குளி பகுதிகளில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. இதன்காரணமாகவே குன்னத்தூரில் கருப்பட்டி மார்க்கெட்டும் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் கருப்பட்டி உற்பத்தி மிக அதிக அளவில் நடந்து வந்த நிலையில் தற்போது பனை மரம் குறைவு காரணமாக வியாபாரம் குறைந்து விட்டது.

எந்த பராமரிப்பு செலவும் இல்லாத பனை மரத்தின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இது குறித்து குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

ஒருக்காபாளைம் மூர்த்தி (பனை ஏறும் தொழிலாளி):

குன்னத்தூர் பகுதிகளில் உற்பத்தியாகும் கருப்பட்டி வெளி மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் சித்த வைத்தியத்திற்காகவும், செக்கு எண்ணெய் ஆட்டுவதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பனைமரத்துக்கு எந்த விதமான செலவும் செய்ய தேவையில்லை. பனைமரம் 120 ஆண்டுகள் வளரக்கூடியதாகும். 120 ஆண்டு வளர்ந்த பனைமரம் பூ பூத்து கூந்தை பனை என்று சொல்லக்கூடிய பக்குவமாய் வளரும். பனைமரம் வீடு கட்டுவதற்கும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நுங்கு உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியதாகும். பனை ஓலையில் இருந்து குழந்தைகள் விளையாட்டு பொருள் மேலும் விசிறி போன்ற பொருட்கள் தயாரிக்கலாம். பனைமரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பதநீர் வெயில் காலங்களில் குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய பானகமாகும். இதில் இருந்து தான் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இத்தகைய கருப்பட்டி வெளி மாநிலங்களுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பெரியகாட்டை கருப்புசாமி( கருப்பட்டி உற்பத்தி செய்பவர்): முன்பு பனைமரம் அதிகமாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக சரியான மழை இல்லாத காரணத்தால் 10 சதவீதம் பனைமரம் தான் உள்ளது. மற்ற மரம் அனைத்தும் வறண்டு விட்டது. வரும் தலைமுறையினர் யாருக்கும் பனைமரம் ஏறத் தெரிவதில்லை. அப்படியே பனைத் தொழில் செய்யும் ஆண்களுக்கு பெண் கொடுக்க மறுக்கப்படுகிறது. ஆகவே வரும் தலைமுறையினர் பனைமர ஏற விரும்புவது இல்லை. ஆகவே வருங்காலங்களில் பனைத்தொழில் ஏறும் நபர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்